திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்
அருந்தவ நாயகி சன்னதிச் சிறப்பு:
சிவபூசைப் பேறு காரணமாக விண்ணரசு உரிமை பெற்ற தேவேந்திரன், தேவசிற்பியான மயனைக் கொண்டு அருந்தவ நாயகிக்கு ஓர் ஆலயம் அமைத்துப் பூசனை மேற்கொண்டான். அதனால் மேலும் பல பேறுகளும் அவனுக்குக் கிடைத்தன. இவ்வாறே அருவத்திருமேனி கொண்டு எழுந்தருளும் அருந்தவ நாயகியைத் துதித்துப் பேறு பெற்றவர் எண்ணிலர் ஆவர்.
சுக்கிர வாரங்களில் (வெள்ளிக்கிழமை ) சிவகர தீர்த்தத்திலும், கடலிலும் நீராடித் திருநீறும் அக்கமணியும் பூண்டு பஞ்ச தசாட்சரி செபித்துக் கொண்டு முற்றும் உணவின்றியோ, இரவு மட்டும் உணவின்றியோ நோன்பு மேற்கொண்டு அம்மையை நறுமண மலர்மாலைகளால் அலங்கரித்துத் துதித்து வணங்குவோர் உலகில் நினைத்ததெல்லாம் பெறுவர்.
செவ்வாய்க் கிழமைகளில் நூற்றெட்டுத் தாமரை மலர் கொண்டு அருச்சித்து நூற்றெட்டுத் திருவிளக்கிட்டு வழிபடுபவர்களுக்கும், புரட்டாசி மாதத்து நவராத்திரியில் ஒரு பொழுது உண்டு, பாடல விருட்ச மூலத்தில் எழுந்தருளியிருக்கும் அருந்தவநாயகியை அருச்சித்து பஞ்சதசாட்சரி மந்திரத்தை நூற்றெட்டு உருச்செபித்தவர்களும் பல பாவங்களும் நீங்கப்பெற்று இம்மையிற் பெரும் பதவியேற்றிருந்து மறுமையில் பேரின்ப முத்தி அடைவர்.
பாடலீசனையும், பெரிய நாயகி அம்மையையும், அம்மை அருந்தவம் செய்த இடத்தோடு சேர்த்து தரிசனம் செய்தோர் எல்லாப் பிறவியிலும் இன்பமே எய்துவர்.
இந்திரன் முதலான தேவர்கள் பதவி பெற்றதும், பிரமனும் திருமாலும் படைத்தல், காத்தல், தொழிலைப் பெற்றதும், அருந்தவ உமையைப் பூசை புரிந்ததன் பயனே ஆகும்.
இந்திரன் மனைவி புலோமசை, பத்து வெள்ளிக்கிழமைகளில் காராம் பசுவின் பால் அபிஷேகம் செய்து அருந்தவப் பிராட்டியைப் பூசித்ததன் பயனாய் ஜயந்தனைப் பெற்றாள்.
காசியபரின் மனைவி அதிதி, பத்து வியாழக்கிழமைகள் பூசித்ததன் பயனாக ஆதித்யர்களைப் பெற்றாள். கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அங்ஙனம் பூசித்ததன் பயனாய் முருகப் பெருமானுக்குத் திருமுலை அருத்தும் பேறு பெற்றனர். அருக்கர் பன்னிருவர், இருடியர் பலர், தேவ கன்னியர் முதலாயினோர் பூசித்ததால் பற்பல பேறுகளைப் பெற்றனர்.
அம்பிகை கன்னிகையாகி இறைவனைப் பூசித்துத் தவம் புரிந்ததால் கன்னிகாபுரம், கன்னி வனம் முதலான பெயர்களை இந்தத் திருத்தலம் பெற்றது. அவளால் என்றென்றும் காக்கப் பெறுவதால் கன்னி காப்பு என்ற பெயரையும் பெற்றது.
தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......
Comments
Post a Comment