திருப்பாதிரிப்புலியூர் தல வரலாறு - பகுதி 6

திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

இறைவி இறைவனுடன் சேர்ந்த சிறப்பு:

     சேயின் உடல் நோய் தீர மருந்துண்ணும்  தாயைப் போல் அருந்தவத்தினை மேற்கொண்டு தேவி நூறு ஆண்டுகளைக் கழிக்க, தேவன், விடைமேல் எழுந்தருளிக் காட்சி தந்தருளினான். ஐயன் எழுந்தருளியதைக் கண்ட தேவி, மலரடிகளைச் சிரமேல் தாங்கி வணங்கியெழுந்து பற்பலவாறு போற்றித் துதித்து நின்றாள். பரமன், " உமையே! இந்தத் தலத்தின் அருமை தெரிந்து உலகத்தோர் உய்ய வேண்டுமென்பது காரணமாகவே, கயிலாயத்தில் யாம் உம்முடன் விளையாடினோம்.நாம் இருவரும் வேறுவேறல்லர் என்னுங் கருத்தாலோயே வெற்றி எமக்குரியதென்று வாதாடினோம். உம் கலைகளில் ஒரு கூறு கொண்டு இப்பாதிரி மர நிழலில் அருந்தவ நாயகி என்ற பெயருடன் விண் உருவாய் அமர்ந்தும், மற்றை கலைகள் யாவும் பொருந்தப் பெரிய நாயகி என்னும் பெயருடன் அமர்ந்தும் வழிபடும் அடியவர் துன்பம் துடைத்து பெருங்கடலினின்றும் விடுவிப்பாயாக!” என்றருள் செய்தார்.


     அண்ணலே ! என் பிழை பொறுத்து மன்னித்தருள்க! என வேண்டிய அன்னைக்கு, “மன்னித்தோம்!” என அருளிய இறைவன் பெரியநாயகியம்மையின் திருக்கரம் பற்றித் தன் இடப்பாகத்தில் அமர்த்திப் பாதிரி நிழலில் அமர்ந்துள்ள சிவலிங்கத்தில் மறைந்தருளினார்.
அடியார்கள் அரவொலி எழுப்பினர். இருடியரும், தேவர்களும், முனிவர்களும் பரமனைப் போற்றி வாழ்த்திப் பணிந்தனர். தேவ முழக்கொலி எங்கும் நிறைந்தது. எங்கும் பூமழை பொழிந்தது.


தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......

Comments