திருப்பாதிரிப்புலியூர் தல வரலாறு - பகுதி 5

திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

இறைவி பூசை செய்த சிறப்பு :

இறைவன் அருளியதைத் திருவுளங் கொண்டு மகிழ்ந்த அம்மை, திருக்கயிலையை விட்டு நீங்கினாள். கன்னியர் எழுவரும் துணையாகச் சூழப் பூவுலகத்தே, கயிலைக்குத் தென்பால் உள்ள புட்கரம், துண்டுலி,  கண்ணுவாச்சிரமம், வாரணாசி, மகாகாளம். இரேணுகா க்ஷேத்திரம், இராமசேது, மாயூரம், திருமுதுகுன்றம் முதலான தலங்கள் பலவற்றையும் அடைந்து பரமனைத் துதித்தாள்

பாடல் வனம் வந்தடைந்த தேவி, பாடல் நாதனைப் பரவித் துதிக்கும் முனிவர்கள், அந்தணர் கூட்டங்களோடு கிளி முதலான பறவைகளும் பரமனைப் பாடிப் பரவுவதைக் கண்டாள். எங்கெங்கும், வெண்ணீற்றொளியும், அந்தணர் வேள்வித் தீயின் ஒளியும் கண்டாள். கெடில நதி, பெண்ணை ஆறு, பாலோடை முதலியவற்றில் நீராடி வழக்கம் போல் இறைவனைப் பூசித்து வலம் வந்தாள், வலம் வரும் போது இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. முன், கயிலையில் இறைவன் அருளியவாறு தனக்குத் தவம்புரிய ஏற்ற இடம் இதுவேயென அறிந்தாள்.

தேவி, உண்ணா நோன்பினை மேற்கொண்டு இறைவனை உளம் உருகத் தோத்திரம் செய்து வணங்கினாள். தனக்குத் திருவருளால் இடம் காட்டி ஆட் கொண்ட தன்மையை வியந்து போற்றினாள்.



உமையம்மை நாள் தோறும் நியமத்தோடு நீராடிப் பூசித்து, இறைவனுக்கு வடபால் தவம் மேற்கொண்டாள்.
நாள்தோறும் பூசனை புரிவதற்கு வேண்டும் பொருட்களைச் சேடியர் அமைத்துக் கொடுப்பார்கள். பாதிரி மரம் தெய்வத்தன்மை பொருந்தியது, ஆதலால் அன்னையின் பூசைக்கு வேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் தந்தது, பலவகைப் பூக்களையும் தந்தது.

தவம் புரியுங்கால், உணவின்றி பாதங்கள் நிலத்தில் பதியாமல், வாயு உருவந்தாங்கி, அருமை திருக்குழந்தையாம் முருகனுந் தேடிக் காண இயலாத அருவத் திருமேனியுடன் அன்னை தவம் புரிந்தாள்.

அன்னை பூசனை புரியுங்கால், யாவற்றையும் சேகரித்துக் கொண்டு முறைப்படி அபிஷேகம் செய்து. திருவொற்றாடை சாத்தி, திருநீறிட்டு, திரு ஆடை சாத்தி, திருமாலை, திருவாபரணங்களைச் சூட்டி மந்திரங்களால் அருச்சித்து, தூப தீபம் காட்டி மகா நிவேதனம் செய்து போற்றித் துதித்து வழிபட்டு வந்தாள்.

பூசனை முடிந்த பின்னர், தக்க அந்தணர்களுக்கும்,  அடியார்களுக்கும் அமுது ஊட்டி பெருமகிழ்ச்சியுடன் பாதிரி மரத்தடியிலே அருவாய்த் தவம் மேற்கொண்டாள்.

தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......

Comments