அருள்மிகு பெரியநாயகி உடனுறை அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில், திருப்பாதிரிப்புலியூர்.
தலக்குறிப்புகள்
நாவுக் கரசு நரலையழுந் தாதெடுத்த
சேவுக் கரசு சிவக்கொழுந்து-யாவுக்கும்
சான்றாத் துலங்குமுதல் சம்புகடை ஞாழலில்வாழ்
தோள் சாத் துணையே துணை. - பழம் பாடல்
திருப்பாதிரிப்புலியூர் கடலூர் மாவட்ட தலை நகரமாகும். பண்டைத் தமிழ்நாட்டுள் நடு நாடெனப் பெயரமைந்த நாட்டிலிருப்பது. நடுநாட்டு தேவார பாடல் பெற்ற தலங்கள் 22ல் 18வது தலமாகும். விழுப்புரம் - சிதம்பரம் ரயில் பாதையிலிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் ரயில் மற்றும் பேருந்து நிலையத்திற்கும் மேற்கே வெகு அருகே இத்தலம் உள்ளது.
தல சிறப்புப் பெயர்கள்:
கடைஞாழல், கன்னிவனம், கன்னிகாபுரம், பாடலபுரம், ஆதிமாநகர். உத்தபுரம் பாதிரிப்பதி, புலிசை திருப்பாதிரிப்புலியூர்,எனப் பல பெயர்களைக் கொண்டுள்ளது. கடை ஞாழல் ஊர் என்பதே கடலூர் எனவும் மருவிற்று.
தல இறைவனின் சிறப்புப் பெயர்கள்:
கன்னிவன நாதா தோன்றாத்துணைவர். கடைஞாழலுடைய பெருமானடிகள்,சிவக்கொழுந்தீசர், உத்தாரேசன், பாடலநாதன், கரையேற்றும் பிரான், பாடலீசுவரர் முதலானப் பெயர்கள் இறைவன் அழைக்கப் பெறுகிறார்.
தல இறைவியின் சிறப்புப் பெயர்கள்:
பெரியநாயக, அருந்தவ நாயகி,தோகையம்பிகை, முதலான பெயர்களால் இறைவி அழைக்கப் பெறுகிறாள்.
இத்தல விநாயகப் பெருமானின் சிறப்பு:
சொன்ன வாறறி விநாயகர், மேற்கு மதில் விநாயகர், கன்னி விநாயகர் என வழங்கப் பெறுகிறார். அம்மன் தவம் புரியும் போது பாதிரி மலர்களைப் பறித்து கொடுத்து உதவியதால் விநாயகப் பெருமான் கன்னி விநாயகர் எனவும் பாதிரி விநாயகர் எனவும் அழைக்கப்படுகிறார். இவரின் கையில் பாதிரி மலர்க் கொத்துக்களே காணப்படுகிறது. இரு திருவுருவங்களும் வலம்புரி விநாயகர் காட்சி அளிக்கின்றனர்.
கோயிலமைப்பு:
மாணிக்கவாசகர் வேண்டுதலுக்கு இணங்க அழகிய பாடல நகரத்தை இறைவன் அமைத்தான் என்கிறது தலபுராணம். அத்தகைய இறைவனுக்கு ஐந்து நிலை இராஜகோபுரமும், ஐந்து திருச்சுற்றுகளால் அமைந்த அழகிய கோவிலும் அமைந்துள்ளது. அம்மைக்கு ஐந்து நிலைகள் கொண்ட சிறிய இராஜகோபுரமும், அதற்கு அருகில் சப்தமாதர் கோவில், வடக்கு நோக்கியும் அமைந்துள்ளது. இறைவனின் இராஜகோபுரத்தின் முன்பு அழகிய இருபத்து நான்கு தூண்கள்க் கொண்ட மண்டபம் உள்ளது. இதில் ஆலய வரலாற்றைக் குறிக்கும் அற்புதமான ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
தீர்த்தங்கள்:
சாகரம் (கடல்) எனும் பிரம்ம தீர்த்தம், இறைவன் சித்தராக வந்து தனது திருக்கரங்களினால் உண்டாக்கிய சிவகர தீர்த்தம் (ஆலய முகப்பில் உள்ளது) இந்திர தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், திக்பாலக தீர்த்தம், கெடில நதி, தென் பெண்ணை ஆறு மற்றும் பாலோடை ஆகிய பல தீர்த்தங்கள் இருந்ததாகத் தல புராணம் தெரிவிக்கிறது. தற்போது சமுத்திர, சிவகர தீர்த்தங்களும், கெடில நதி, பெண்ணை ஆறு இவைகள் மட்டுமே காணப்படுகின்றன.
தல விருட்சம் - பாதிரிமரம்:
அன்னை அருந்தவம் செய்கின்ற காலத் தருநிழலாய்க்
கன்னி வனத்தி லொருபாதிரி கைதை செங்கழுநீர்
மன்னு மலர்க் கொன்றை செண்பகங் கோங்குடன் ஞாழல் மத்தம்
புன்னை நறும்பிச்சி வெள்ளெருக் கம்புயம் பூத்ததுவே. -
திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் காப்பு -3
பன்னிரு பூமலர் பாதிரிக்கண்ணே............
(தலவிசிட்டச் சருக்கம் - 73.) - திருப்பாதிரிப்புலியூர் புராணம்.
இப்பாதிரி மரமானது பாதிரி, தாழை, செங்கழுநீர், கொன்றை, செண்பகம், கோங்கு, ஞாழல், ஊமத்தம், புன்னை, பிச்சி வெள்ளெருக்கு மற்றும் தாமரை ஆகிய பன்னிரு பூக்களையும் பூக்கும் தன்மையுடையதாகும். நான்கு மறைகளும், இருபத்தெட்டு சிவாகமங்களும், சிவ தத்துவங்களும் தவம் செய்து இப்பாதிரி வடிவம் கொண்டது.
நாதகலையே அதன் வேர்; ஐந்து சக்திகளே அதன் திருஉடல், நான்கு வேதங்களே இலைகள், ஆகமங்களே அதன் பூக்கள், மேலாகிய மந்திரம் ஐந்தெழுத்து பூமணம், அகண்ட ஆகாரம் (வடிவாகிய) வெளியெல்லாம் அதனிடத்தே உண்டாவதே. அதனிடம் வீசுவதோ சுத்த மணமாகிய சிவஞானம். இதனை,
நாதம் மூலம் பஞ்ச சத்தி மேனியாக நயந்து நால்
வேதம் தழைத்து ஆகமம் பூத்து விலை பஞ்சாக்கர மணமாய்ச்
சோதி அகண்டாகார சுகோதயமாய்ச் சுத்த நறை விரிக்கும்
போத உருவாம் பாதிரியைப் புகழ்ந்து போற்றிவணங்குவாம்... என்ற பாடலினால் அறியலாம்.
பற்பல தலங்களிலும் அந்தந்தத் தல விருட்சமாகியும் தேவ உலகில் பாரிசாதம் முதலிய தருக்களாகியும் விளங்குவது பாதிரி மரம். அம்மை அருந்தவம் ஆற்றிய போது, வேளை தோறும் பற்பல பூசைப் பொருட்களையும், ஆடைகளையும், நிவேதனப் பொருட்களையும், அடியவர்க்கு அமுதளிக்க வேண்டிய பொருள்களையும் கொடுத்தக் கற்பக விருட்சமாக விளங்கிக் காலந்தோறும் புதியனவாய் பன்னிரு வகைப் பூக்களைப் பூத்த அதிசய மரமாகும் இப்பாதிரி மரம்.
அத்தகைய பாதிரியின் கீழிருந்து மன ஒருமைப் பாட்டுடன் இறைவனையும் இறைவியையும் வழிபடுவோர் 16 பேறுகளையும் மற்றும் பலவற்றையும் பெறுவர்.
இம்மரத்தின் கிளை உடலில் பட்ட மாத்திரத்திலேயே முடக்குவாதக்கால் முயல் உருவமாகச் சாபம் பெற்றிருந்த மங்கண முனிவரும், முயல் உருவம் ஆக சாபம் பெற்றிருந்த உபமன்யு முனிவரும் சாப நீக்கம் பெற்றனர்.
இதர லிங்கங்கள் : அகத்தியர், வியாக்கிர பாதர், மங்கண முனிவர் ஆகியோர் பூசித்த இலிங்கத் திருவுருவங்கள் உள்ளன. யுகமுனீஸ்வரர் லிங்கத்தில் (மங்கணமுனிவர் பூசித்த லிங்கம்) முகம் காண பெறுகிறது.
தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......
அருமை 👍 வாழ்த்துக்கள் 🤝
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி
ReplyDeleteArumai👍🏻
ReplyDelete