திருப்பாதிரிப்புலியூர் தல வரலாறு - பகுதி 4

திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்

இறைவி திருக்கண் மறைத்த சிறப்பு:

உலகத்து உயிர்கள்  உய்யவேண்டுமென்னும்கருணை காரணமாகக் கயிலையில் ஒருநாள், பரமன் பிராட்டியுடன் விளையாடத் திருவுளங் கொண்டான். உமையம்மையின் சேடியர், மாணிக்கப் பலகையும், மரகதக் காய்களும், வைரத்திலான விளையாடு கருவியும் கொண்டு வந்து அமைக்க பரமன் விளையாட்டினைத் தொடங்கினார். பலமுறை தோல்வி பெருமானுக்கே!. ஆனால் வெற்றி தனக்கே என சாதித்தார். அருகேயிருந்த திருமாலிடம் அதுபற்றி கேட்க, எவர் பக்கம் கூறினாலும் தான்
அபசாரம் பட நேரும் எனக் கருதி " இறைவன் திருமுடியின் மீது உள்ள பிறைமதி, பாம்பைக் கண்டு பயந்து பிரம்ம கபாலத்துள்ளே புக, அப்பாம்பு திறந்த வாயுடன் இருந்த "
அதிசயத்தைக் கண்டு கொண்டிருந்ததால் ஆட்டத்தைக் கவனிக்கவில்லையென்று கூறிவிட்டார்.

அம்மையின் கோபம் மேலோங்க, “முச்சுடரும் பொய் கூறா ஆதலின், இறைவன் திருக்கண்களை மறைப்பேன். வெற்றி என் பக்கமாயின் அவை ஒளி தாரா தொழிக!
இறைவன் பக்கம் வெற்றி உண்டெனின் அவை எப்போதும் போல் ஒளி விடுக! ” என்று கூறி எழுந்து சிவபெருமானின் திருக்கண்களைத் தன் இரு கைகளாலும் மறைத்தாள்.


பேரிருள் மூடிற்று, அண்டங்களெல்லாம் இருண்டன. தத்தம் நிலையிலிருந்து கொண்டு இறைவன் கட்டளைப்படி செய்ய வேண்டிய செயல்களையுஞ் செய்ய மாட்டாதவராய் யாவரும் துன்பமுற்றனர். இறைவனுக்கும் அவனோடு நீக்கமற நிறைந்து விளங்கும் இறைவிக்கும் ஒரு கண நேரமே நீடித்த இந்நிகழ்ச்சி, தேவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் பல யுகங்கள் நீடித்தது.

இருளிடைத் துன்புற்ற தேவர், இருடியர், முனிவர், சித்தர் யாவருங்கூடிப் பரமனைப் போற்றித் துதித்துக் கொண்டு திருக்கயிலையைச் சார்ந்தனர். பலவாறு கூறி அழுது அரற்றினர்.

இறைவி, விளைவுகளைக் கருதாமல் தான் செய்த செயலுக்கு வருந்தித் திருக்கரங்களை எடுத்தாள். எங்கும் ஒளி பரந்தது. யாவரும் இறைவனைத் துதித்து தம் கடமைகளை ஆற்ற இயலாமைக்கு மன்னிப்பு வேண்டினர்.
இறைவனும் யாவரையும் வருந்தாது பணிபுரியக் கட்டளையிட்டு அனுப்பினார்.  கடைசியாகக் காலன் மன்னிப்பு வேண்டும் போது, தனக்கும் தன் தூதுவர் முதலாயினவர்க்கும் நேரிட்ட இன்னல்களைப் பலவாறு கூறினான், இறைவனும் மன்னித்தோம் என அருளி விடுத்தான்.

இவையாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தேவி, தன் தவறுக்கு ஒரு கழுவாய் (விமோசனம்) அருளுமாறு இறைவனை வேண்டினாள். இறைவனோ, நீ தன்னின் வேறல்லாத காரணத்தால், உனக்குத் தவறு வாராதென்றும், தீர்வு தேவையில்லையென்று கூறியும் அன்னை விடாது வற்புறுத்தினாள்.

இறைவன், தேவியே! நீ பூவுலகத்தில் நாம் எழுந்தருளியிருக்கும் 1008 தலங்களையும் தரிசித்துக் கொண்டு வருங்காலத்திலே எந்தத் தலத்தில் உன் இடத்தோளும், இடக்கண்ணும் துடிக்கின்றனவோ அந்தத் தலத்தில் தங்கி எம்மை பூசனை புரிந்து தவம் மேற்கொள்க! யாம் அங்கு வந்து உம்மை ஏற்றுக் கொள்வோம்!  என்றருளினார்.

தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......

Comments