திருப்பாதிரிப்புலியூர் தலபுராணம்
இத்தலம் சிவபெருமான் ஆயிரங் கலைகளோடு, அருவுருவத்திருமேனி (லிங்கம்) தாங்கி "திருப்பாதிரி" மரத்தின் கீழ் எழுந்தருளிய தலம். மத்யந்தினரின் மகன் மாத்யந்தினர் (புலிக்கால் முனிவர்) பூசை புரிந்த தலம். இறைவி அருந்தவம் இயற்றி இறைவனுடன் சேர்ந்த தலம். மாணிக்கவாசகருக்காக இறைவன் திருக்குளத்தை ஏற்படுத்திய தலம். கங்காதேவி ஆண்டுக்கொருமுறை வந்து நீராடி, தன் கலைகளுள் ஒன்றை விட்டுச் செல்லும் தலம். திருநாவுக்கரசு நாயனார் கரையேறிய தலம். எனப் பல பெருமைகளையுடையது இத்திருப்பாதிரிப்புலியூர் " திருத்தலம்.
தலபுராணம் கூறுதல் :
சூத முனிவர், சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தல்:
எண் குணத்துஇறைவன், நந்தி தேவருக்குப் பதினெட்டுப்புராணங்களையும் உபதேசிக்க, அவர் தம் மாணவரான சனற்குமாரருக்கு உபதேசிக்க, அவர் தம் மாணவர் வியாச முனிவருக்கு உபதேசிக்க, அவர் தம் மாணவரான சூதமுனிவருக்கு உபதேசித்தார். சூத முனிவர் இவற்றை சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் பொழுது அவர்கள் "திருப்பாதிரிபுலியூர் தலபுராணத்தைக் குறிப்பிட்டு கேட்க சைல புராணத்துள் உருத்திர சங்கிதையுள் உத்திர காண்டத்தில் - தல விசிட்டம் உரைத்த சருக்கம் " என்பது உள்ள திருப்பாதிரிப்புலியூர் தல புராணம் என்பதை அவர்களுக்கு கூறினார். அத்தலபுராண சிறப்புகளை கீழ்கண்ட தலைப்புகளாக இங்கே இடம் பெறச் செய்யப்பட்டுள்ளது.
தல புராண சிறப்புகள்:
- மாத்யந்தினர் (புலிக்கால் முனிவர்) பூசை செய்த சிறப்பு
- இறைவி திருக்கண் மறைத்த சிறப்பு
- இறைவி பூசை செய்த சிறப்பு
- இறைவி இறைவனுடன் சேர்ந்த சிறப்பு
- அருந்தவநாயகி சன்னதிச் சிறப்பு
- இறைவன் சித்தர் வந்த சிறப்பு
- கங்கை வழிபட்ட சிறப்பு
- அக்னி வழிபட்ட சிறப்பு
- மங்கண முனிவர் வழிபட்ட சிறப்பு
- உபமன்யு முனிவர் வழிபட்ட சிறப்பு
- பிரமசீலன் வழிபட்ட சிறப்பு
- திருநாவுக்கரசர் கரையேறிய சிறப்பு
மாத்யந்தினர் ( புலிக்கால் முனிவர் ) பூசை செய்த சிறப்பு:
மத்யந்தின முனிவரின் மகன் மாத்யந்தின முனிவர் இறைவனை மலர்கொண்டு பூசிக்கும் பொழுது ஆகமங்களில் கூறியுள்ள விதிப்படி மலர் பறித்து அம்மலர்களை இறைவனுக்கு பயன்படுத்த எண்ணினார். இதற்காக தம்முடைய கைகளையும், கால்களையும் புலியினுடைய கைகள் கால்களைப் போன்றும் புலியினுடைய கண்களைப் போன்றும் இறைவனிடம் வேண்டிப் பெற்றுக்கொண்டார். (தேன் பொருந்திய மலரைப் பெற வண்டுகள் தீண்டாத காலமான சூரிய உதயத்திற்கு முன்பே மலரைப் பறிக்க புலிக்கண்களைப் போன்றும்,அவ்வாறு பறிக்கும் பொழுது மழை மற்றும் பனிக்காலங்களில் மரங்களின் மீது ஏற புலியினுடைய கைகள் மற்றும் கால்களைப் போன்றும்) இதனால் இவர் "புலிக்கால் முனிவர்" என போற்றப் பெற்றார். இவர் இறைவனைப் பூசித்த தலங்கள் புலியூர் தலங்களாக அழைக்கப்பட்டன. (பெரும்பற்றப்புலியூர் - தில்லை)
பாடல்வன நாதனை தரிசிக்கும் பொருட்டு, தில்லையிலிருந்து வட கயிலையான பாடல வனத்தை அடைந்து, பாதிரி மலர்களை கொண்டு இறைவனை பூசித்து பேறு பெற்றார். பாடலவன நாதனை பாதிரி மலரால் இவர் வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு சிறப்புப் பெயராக "திருப்பாதிரிப்புலியூர் " என்ற பெயர் உண்டாயிற்று.
தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......
தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......
Comments
Post a Comment