திருப்பாதிரிப்புலியூர் தல வரலாறு - பகுதி 2

திருப்பாதிரிப்புலியூர் கல்வெட்டுகள்

கல்வெட்டுச் செய்திகள்:
     இத்தலத்தில் மொத்தம் 30 கல்வெட்டுக்கள் காணப்பட்டன. கி.பி. 1902 ஆம் ஆண்டு இவற்றில் 21 கல்வெட்டுக்கள் இந்திய அரசினரால் படியெடுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. இத்தலத்தின் நுழைவு வாயிலின் இருபக்கமும் உள்ள நான்கு கல்வெட்டுக்கள் சரித்திரத்தை பறை சாற்றி இன்னும் மிளிர்கின்றன.
படியெடுக்கப்பட்ட 21 கல்வெட்டுக்கள் - இந்திய கல்வெட்டுத் தொகுதி - VII-ல் வெளியாகி உள்ளன.

Annual Reports on South Indian Epigraphy for the year ending 1902. Numbers 115-135/and South Indian Inscription Volume VII Numbers 739.....759

மீதமுள்ள கல்வெட்டுக்களில் நான்கு Annual Report of Epigraphic (1953-1954)- இல் எண்கள் 299, 300, 301,302 ஆகிய பக்கங்களில் வெளியாகி உள்ளது.

மேற்கூறிய 21-கல்வெட்டுக்களில், 19-கல்வெட்டுக்கள் சோழ மன்னர் காலத்தையும், 1-கல்வெட்டு பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் காலத்தையும், 1-கல்வெட்டு விஜயநகர மன்னர் பரம்பரை வீர விருப்பன்ன உடையார் காலத்தையும் குறிக்கின்றன.



கல்வெட்டுக்களின் காலமும், மன்னர்களின்
கொடையும்:

கி.பி. 923 முதல் 1125 ஆம் ஆண்டு வரை (பத்து முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரையிலானவை)

கி.பி. 923 - தாமோதக்கன் ஒற்றியூரான் ஒரு கமுகந்தோட்டம் தந்ததும், நாராயணன் சேந்தன் திருவமுதிற்காக வேண்டிய நெல் கொடுத்ததும் இக்கல்வெட்டால் அறியப்படுகிறது.

கி.பி. 959 - இராஜ கேசரி வர்மன் காலம் - இக்கல்வெட்டில் 96 ஆடுகள் கொடுக்கப்பட்ட செய்தி அறியப்படுகிறது.

கி.பி. 969 - கோப்பரகேசரி வர்மன் காலம் - இக்கல்வெட்டு மூலம் சோமாசியார் 5 பிராமணர்களுக்கு குடியிருக்க நிலம் தந்த செய்தி அறியப்படுகிறது.

கி.பி. 1057 - வீரராஜேந்திரன் காலம் - இக் காலத்திய கல்வெட்டு மும்முடிச்சோழர் பேரியான், காடவ தேவன் ஆகியோர், திருவிளக்கிட நெய் கொடுத்ததை தெரியப்படுத்துகிறது.

கி.பி. 1076 - குலோத்துங்கன் காலம் - இக்கல்வெட்டால் இராமேச்சுரமுடையான் திருவிளக்கிற்காக 20 பொற்காசு கொடுத்தமை அறியப்படுகிறது

கி.பி. 1118, 1124, 1125 - விக்கிரம சோழன் காலம் - இக்கல்வெட்டுகளால் மூவேந்தவேளான், உலகளந்த மூவேந்தவேளான் ஆகியோர் முறையே பதினெட்டுப் பொற்காசு கொடுத்தமை அறியப்படுகிறது.

கி.பி. 1213 - மூன்றாம் குலோத்துங்கன் காலம் - இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவதானத்தின் எல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கல்வெட்டுகளிலிருந்து இத்தலத்திற்கு நிலங்கள் தேவதானம் ஆகவும் பிரமதேயம் ஆகவும் கொடுக்க பெற்றிருந்த செய்திகள் புலனாகின்றன. (தேவதானம் - இறைவனுக்கு நிலங்கள் தானமாக வழங்குதல், பிரமதேயம்-பூஜை செய்யும் பிராமணர்களுக்கு நிலங்கள் தானமாக வழங்குதல்)

மன்னவரும் பிறரும் கோயிலுக்குப் பல நிவந்தங்கள்அமைத்தவையும், நிலம், தோட்டம், அந்தணர்க்கு இருக்க இடம் முதலியவை அளித்த செய்திகள் நமஹ புலனாகின்றன.

இக்கோயிலின் வெளித்துறை ஆட்சி, திருநட்டக் கணப் பெருமக்கள் என்ற ஒரு குழுவினராலும், உள்துறை ஆட்சி, திருவுண்ணாழிகைப் பெருமக்கள் என்ற குழுவினராலும் சிறப்பாக நடத்தப்பெற்று வந்த செய்தி அறிந்து மகிழ்கின்றோம்.

மேலே கூறப்பட்ட கல்வெட்டுகளில் இத்தலத்தினை "திருப்பாதிரிப்புலியூர் பரநிருப பராக்ரம சதுர்வேதி மங்கலம்" என்று குறிக்கப்பட்டுள்ளது. "சதுர்வேதி மங்கலம்" என்பது. சதுர் நான்கு ; வேதி-வேதம் அறிந்தவர்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்த பிராமணர்கள் வசித்த இடம்.

தல வரலாற்றின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் காண்க......


Comments